பரிதாபமாய் என் தாய் மண் !!!
நான் நடை பயின்ற கடற்கரையில்
நான் பொறித்த என் காலடித் தடங்களை
போர் அலை வந்து முற்றாக அடித்துச்
சென்றிருந்தது.......
நான் மகிழ்ந்து சுவாசித்த
பூந் தென்றலில் கூட இன்று
பிணவாடை........
பொன்கதிர் விழைந்த கழனிகளில்
மலிந்து கிடக்கின்றது
பிணங்களின் எச்சங்கள்....
காளி கோவிலுக்குள் செருப்புப் போட்டால்
"காளிக்கிழவி கழுத்தை நெறிப்பா" என
அம்மா சிறுவயதில் சொன்ன ஞாபகம்....
இன்று மூலஸ்தானத்திலும் வெறியர்களின்
சப்பாத்துக் கால்தடங்கள்....
ஏன் அவர்கள் கழுத்தை மட்டும்
காளி நெரிக்கவில்லை??
பாடம் பயின்ற பள்ளிக் கூடங்கள்
காலம் செய்த கோலத்தால்
அகதி முகாம்களாயோ இல்லை
அந்நியனின் பாசறை ஆகவோ
மாறி தன் கோலம் மாறி இருந்தது....
முகவரி தொலைந்து
முட்கம்பிகளின் நடுவே
பரிதாபமாய் நான் நேசிக்கும்
என் தாய் மண்....
குரலிருந்தும் ஊமையாய்....
மௌன ஓலத்துடனும்,
கட்டுடைந்த கண்ணீருடனும்
செய்வதறியாது இக்கரையில் நான்.....
No comments:
Post a Comment