இறந்து வடித்தக் கண்ணீர்!
இறந்து வடித்தக் கண்ணீர்!
கருவறைக்குள்ளேயே…
புறச்சூழலின் அதிர்வுகளை
புரிந்துணர்ந்தேன்.

என்னைச் சுமந்தவள்
ஏக சக்திகளை இழந்திருந்தாள்
என்னைக்காக்கும் பொருட்டு.

என்னை பெற்றெடுக்க
ஒரு காட்டு மரம்
நிழல் தந்தது!.

தாக்குதல் அத்தனையிலும்
என்னைக்காக்கவே
எல்லா நாளும் போராடினாள்
அம்மா.

“அம்மா”
என்று அழைத்தப்பின்னும்,
“அம்மா”
என்பதைக் கேட்டப்பின்னும்
நிகழ்த்தப்பட்டிருந்தால்…
நிறைவை தந்திருக்கும்,
எங்கள் மரணம்.

இது,
நீங்கள்
இரங்க வடித்தக் கவிதையல்ல.
நான்,
இறந்து வடித்தக் கண்ணீர்.

       (  ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009.  சிறிலங்கா படையினர் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் எறிகணைகள், ஆட்லறி எறிகணைகள், கனோன் ரக பீரங்கிகள் மற்றும் பல்குழல் ரொக்கட் லோஞ்சர் ஆகிய கனரக நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் மாண்ட ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களில்…இந்த அழகிய மழலையும் அடக்கம்)